AUS vs NZ, 1st ODI: கேரி, க்ரீன் அதிரடி; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது.

ஜிம்பாப்வே அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே சிறப்பாக பேட்டிங் ஆடிய நிலையில், 46 ரன்களுக்கு ஆடம் ஸாம்பாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.
Trending
3 மற்றும் 4ம் வரிசைகளில் இறங்கி பொறுப்புடன் ஆடிய கேன் வில்லியம்சன் (45) மற்றும் டாம் லேதம் (43) ஆகிய இருவரையும் க்ளென் மேக்ஸ்வெல் தனது சுழலில் வீழ்த்தினார். டேரைல் மிட்செல் (26) மற்றும் பிரேஸ்வெல்(7) ஆகியோரையும் மேக்ஸ்வெல்லே வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை மொத்தமாக கொத்தாக வீழ்த்தினார் மேக்ஸ்வெல்.
அதன்பின்னர் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, 50 ஓவரில் 232 ரன்கள் அடித்து, 233 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய க்ளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்ன, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே, மார்கஸ் டோய்னிஸ் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி - கமரூன் க்ரீன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின்னர் 85 ரன்களில் அலெக்ஸ் கேரி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமரூன் க்ரீன் 89 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதனால் 45 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now