
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் அபாரமான சதத்தின் மூலமும், மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாகவும் முதல் இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 90 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான நி தரப்பில் அமர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் அடித்த நிலையில் அப்துல்லா ஷபீக் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் தனது பங்குக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது.