
AUS vs SA, 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் ஸோர்ஸி 38 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்தார். பின் இந்த போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ பிரீட்ஸ்கி 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 88 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.