
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஷேன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
கவாஜாவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை கட்டமைத்தார். கவாஜா 206 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 13-வது சதத்தை விளாசினார். அதேவேளையில் தனது 30அவது சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 192 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.