AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹபார்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் சேர்ந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் இங்கிலிஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 16 ரனளுடன் நடையைக் கட்ட, அதே ஓவரில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வார்னரும் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து இணைந்த டிம் டேவிட் - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ வேட் விக்கெட்டை ரஸல் கைப்பற்றினார். இப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோஸப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் - பிராண்டன் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 89 ரன்களைச் சேர்த்தனர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த பிராண்டன் கிங் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் 14, ஷாய் ஹோப் 16, ஆண்டரே ரஸல் ஒரு ரன்னில் என அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 18 ரன்களிலும், ரூதர்ஃபோர்ட் 7 ரன்களுக்கும் என சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கடைசி ஓவரை சீன் அபோட் வீசினார்.
ஆனால் அந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 15 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 33 ரன்களை சேர்த்து போராடிய நிலையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now