AUS vs WI, 2nd T20I: ஸ்டார்க் அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - காமரூன் க்ரீன் களமிறங்கினர். முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரிகள் மூலம் ரன்களை தொடங்கினர். 2ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் க்ரீன் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஞ்ச் 15 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் வெளியேறினார்.
ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரைத் அடுத்த வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 20 பந்தில் 42 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்னிலும் மேத்யூ வேட் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜான்சன் சார்லஸ் - பிராண்டன் கிங் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சார்லஸ் 29 ரன்களிலும், பிராண்டன் கிங் 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 2, ஜேசன் ஹோல்டர் 16 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 18 ரன்களையும் சேர்த்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now