
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி கடந்த 25ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 216 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 91, கேமரூன் க்ரீன் 42 ரன்களைச் சேர்த்ததைத் தவிற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் அந்த அணி 207 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூல வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்தது.