
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் குயின்ஸ்லேண்டில் நேற்று தொடங்கியது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாளன்று மழை பெய்ததால் ஆட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இந்திய மகளிர் அணி 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. மந்தனா 80, பூனம் ராவத் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்தார் மந்தனா. 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைத்தார். மேலும், வெளிநாடுகளில் சதமடித்த 5ஆவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் மந்தனா பெற்றார். பிறகு 127 ரன்களில் கார்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.