
இந்திய மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரிய புனியா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியா புனியா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்னில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 19 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - ஹர்லீன் தியோல் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹர்லீன் தியோல் 19 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதற்கடுத்து 17 ரன்களை எடுத்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 24 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிச்சா கோஷும் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஷாட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.