
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லெனிங் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 31 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்காக 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மெக் லெனிங் 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்துள்ளார்.
கடந்த 2014இல் ஆஸ்திரேலியாவை முதன்முதலில் வழிநடத்திய லெனிங், மகளிர் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வருகிறார். 78 ஒருநாள் போட்டிகளில் 69 வெற்றிகள், 100 டி20 போட்டிகளில் 76 வெற்றிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி என ஆஸ்திரேலியாவை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார்.
மேலும் அவர் தனது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு நான்கு டி20 உலகக்கோப்பைகள், ஒரு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 103 ஒருநாள் போட்டிகள், மற்றும் 132 டி20 போட்டிகள் உட்பட 241 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.