
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது இன்று (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 32 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சூஸி பேட்ஸ் 14 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிலிம்மரும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அமெலியா கெர் மற்றும் சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமெலியா கெர் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும், சோஃபி டிவைன் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது.