
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் பிலிம்மருடன் இணைந்த அமெலியா கெர்ரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீராங்கனை பிலிம்மர் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார்.