
மேக்ஸ் 60 கரீபியன் டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் - நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கரீபியன் டைகர்ஸ் அணியானது ஜோஷ் பிரௌன், கிறிஸ் லின் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரண்மாக 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் பிரௌன் 60 ரன்களைச் சேர்த்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் கரீபியன் டைகர்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் பிரௌன் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களை விளாசி 60 ரன்களைக் குவித்தார். அதிலும் குறிப்பாக இசுரு உதானா வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயெ ஜோஷ் பிரௌன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அந்த ஓவரில் 26 ரன்களைக் குவித்தும் எதிரணி வீரர்களை ஸ்தம்பிக்க வைத்தார்.