
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தினாலும், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோரது அதிரடியான பினீஷிங்காலும் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம் ஆகியோர் அரைசதங்களை கடந்த போதிலும் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து 5 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் சதமடித்த டிராவிஸ் ஹெட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.