
கடந்த வருட செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பிறகு, பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.