
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணியானது தற்போது நடப்பு சாம்பியன் என்ற மிகப்பெரிய கவுரவத்தோடு தங்களது நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் ஒன்றில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி என இரண்டு போட்டிகளுமே மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக நான்கு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.
இதில் குறிப்பிட வேண்டிய விசயம் யாதெனில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ரத்து என மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் வெற்றியோடு சேர்த்து 5 புள்ளிகளுடன் முதல் இடத்தை வகிக்கிறது.