
ஆடவருக்கான எட்டாவது சீசன் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் சிட்னியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தை நினைவூட்டக்கூடும். ஏனெனில் அப்போது பட்டம் வெல்வதற்கு இந்த இரு அணிகள்தான் மல்லுக்கட்டியிருந்தன. ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பு செலுத்தக்கூடும். வேகப் பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸம்பா முக்கிய பங்காற்றக்கூடும்.
பேட்டிங்கில் ஆரோன் பின்ச் பார்முக்கு திரும்பி இருப்பது பலத்தை அதிகரித்துள்ளது. டேவிட் வார்னர் கடைசியாக விளையாடிய 5 டி 20 ஆட்டங்களில் 205 ரன்கள் விளாசி சிறந்த பார்மில் உள்ளார். மிட்செல் மார்ஷின் உடற்தகுதி, கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது.