
டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் யாரும் எதிர்பாராதவகையில் 14ஆவது ஓவரின்போதே 4 விக்கெட் இழப்புக்கு 66 என்கிற நிலைமையில் இருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மலானும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். மலானுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர்.
மலான் 64 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் 37ஆவது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 என்கிற நிலைமையை அடைந்தது இங்கிலாந்து. எனினும் மற்றொரு முனையில் பொறுப்பாக ஆடிய மலான், 107 பந்துகளில் சதமெடுத்தார். கடைசியில் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கிவிட்டு 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மலான்.