
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் நியூசிலாந்து மகளிர் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிலிம்மர் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமெலியா கெர் 7 ரன்களுக்கும், ஹாலிடே 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸும் 33 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மேடி க்ரீன் தனது பங்கிற்கு 35 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பந்துவீசிய 6 வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் பெத் மூனி 13 ரன்களுக்கும், கேப்டன் அலிசா ஹீலி 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் தஹிலா மெக்ராத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.