ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்டு பயோ-பபுள் கட்டமைப்பை உடைத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று மூச்சு விடுவதற்குள் கரோனா அடுத்தடுத்து பரவத் தொடங்கியது. இதனால் அரண்டு போன பிசிசிஐ, 31 ஆட்டங்கள் மீதம் இருக்கையில் ஐபிஎல் போட்டிகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேச வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். எனினும், இந்தியாவில் இருந்து பயணிகள் எவரும் ஆஸ்திரேலியாவில் நுழைய மே 15ஆம்தேதி வரை தடை அந்நாடு தடை விதித்திருந்தது. இதனால் ஐபிஎல்லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என மொத்தம் 38 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது.