
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 6ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் தொடரில் இந்திய அணியின் எமனாக இருந்த அவர், மீண்டும் நேற்று வெற்றியை தட்டிப் பறித்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் சூப்பர் ஸ்டாராக வீரராக டிராவிஸ் ஹெட் உயர்ந்துள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் அண்மை காலங்களில் மிகமுக்கியமான வீரராக மாறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினாலும், டிராவிஸ் ஹெட் இதுவரை வெறும் 64 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.