மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
மாலத்தீவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மே 4ஆம் தேதியுடன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் மாலத்தீவில் சிக்கியுள்ளனர்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
Trending
இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேர் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அவர்களை அங்கிருந்து தாய் நாட்டிற்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியர்களின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே 15ஆம் தேதி அனுமதி கிடைத்துவிடும் என்பதால் வரும் மே 16ஆம் தேதி தனி விமானம் மூலம் அனைவரும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐபிஎல் அணிகளிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. முதலில் மலேசியா செல்லும் அவர்கள் அங்கிருந்து சிட்னிக்கு செல்லவுள்ளனர். அங்கு சென்ற பிறகு அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
ஆஸ்திரேலியர்கள் அனைவரும் தாய் நாடு திரும்பினாலும், சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியின் நிலைமை மட்டும் சிக்கலாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மைக் ஹஸ்ஸி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கரோனா நெகட்டிவ் என வந்தாலும், அவர் மாலத்தீவில் இருந்து சக வீரர்களுடன் செல்ல முடியாது.
ஏனென்றால் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மாலத்தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மைக் ஹஸ்ஸியை நேரடியாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now