
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக அறியப்படுபவர் கிளென் மேக்ஸ்வெல். கடந்த 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது முதல் கோப்பையை வென்றது வரையிலும் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக அந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேப்டன் பாட் கம்மின்ஸை ஒருமுனையில் நிறுத்தி மறுபக்கம் தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் பரபரப்பான அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார் கிளென் மேக்ஸ்வெல்.
அந்த வெற்றியின் காரணமாகவே ஆஸ்திரேலிய அணியால் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற முடிந்ததுடன், கோப்பையையும் வென்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல், இன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.