
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த அலிசா ஹீலி - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அலிசா ஹீலி 38 ரன்களிலும், எல்லிஸ் பெர்ரி 34 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் 18 ரன்களுக்கும், லிட்ச்ஃபீல்ட் 8 ரன்களுக்கும், தஹ்லியா மெக்ராத் 7 ரன்களிலும் ஜார்ஜியா வர்ஹம் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.