
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி பெர்த்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் சுனே லூஸ் 26, மஸபடா கிளாஸ் 10 ஆகியோரையைத் தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், வெறும் 76 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டார்சி பிரௌன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் போப் லிட்ச்ஃபீல்ட் 4 ரன்களுக்கும், எல்லி பெர்ரி 3 ரன்களுக்கும், தஹ்லியா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் 12 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.