எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்த காரணத்தை அக்ஸர் படேல் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் சற்று பொறுமையாக விளையாடினாலும் இறுதி நேரத்தில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சாய் ஹோப், தனது 100ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். நடுவரிசையில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
Trending
கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் தவான் 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். கில் 43 ரன்களிலும், சூர்யகுமார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்ரேயாஷ் ஐயர், சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இறுதிக்கட்டத்தில் ஆல்ரவுண்டர் அக்ஸார் படேலும், அதிரடியாக விளையாடி தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில், 64 ரன்கள் விளாசினார். 8 விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணி, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற அக்சர் பட்டேல் அவரது இந்த அதிரடியான ஆட்டம் குறித்து பேசுகையில், “இன்று நான் பேட்டிங் செய்த இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட வேளையில் மிக முக்கியமான ஆட்டமாக எனது ஆட்டம் இன்று அமைந்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் நாங்கள் தொடரை கைப்பற்றியதிலும் எனது பங்கு இருப்பதை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் இதேபோன்று போட்டிகளை இறுதி வரை கொண்டு சென்று அதிரடியாக முடித்துள்ளோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் இறுதிவரை பதட்டப்படாமல் இருந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதுமட்டும் இன்றி நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எனவே எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். இதுமட்டும் இன்றி இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எனது அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now