
ஐபிஎல் 16ஆவது சீசனின் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முழுமையாக பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை எட்டினால் முதல் வெற்றி பெறலாம் என்கிற நோக்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகச்சிறந்த துவக்கம் கிடைத்தது. இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.
இஷான் கிஷன்(31) தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பிறகு உள்ளே வந்த திலக் வர்மா-ரோகித் சர்மா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை இலக்கை நோக்கி எடுத்துச் சென்றார். இவரும் துரதிஷ்டவசமாக 41 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கடைசி வரை நின்று போராடிய ரோகித் சர்மா 65 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் நின்ற டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் 19ஆவது ஓவரில் 15 ரன்கள், 20ஆவது ஓவரில் 5 ரன்கள் அடித்து முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உறுதி செய்தனர்.
விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கையும் இழந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இதில் குறிப்பாக இரண்டு போட்டிகள் சொந்த மைதானத்தில் நடந்தவை என்பது கூடுதல் வருத்தமளிக்கக்கூடிய செய்தியாக டெல்லி அணிக்கு அமைந்திருக்கிறது.