
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடரின் லீக் சுற்றில் மோதிய போது பந்து வீச்சில் தெறிக்க விட்ட பாகிஸ்தான் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திண்டாட வைத்தது. அதனால் 66/4 என இந்தியா சரிந்த போதிலும் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 266 ரன்கள் எடுக்க உதவினர்.
அப்போது மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட போட்டியின் முடிவில் இரு அணிகளுமே சமமாக மோதிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். எனவே அந்தப் போட்டியில் மழையால் தவற விட்ட வெற்றியை இம்முறை மீண்டும் சிறப்பாக செயல்பட்டு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் இந்தியா வெற்றி வாகை சூடுவதற்கு முதலில் ஷாஹின் அஃப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்ததால் கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையை பயன்படுத்தி இம்முறை 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் தோற்கடிப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் கடந்த சில தினங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முடிந்த இலங்கை பிரிமியர் லீக் தொடரில் தங்களுடைய பெரும்பாலான வீரர்கள் விளையாடியதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.