
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அரைசதம் அடித்தார்கள். அதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி சதங்கள் பெற்றார்கள். இந்திய அணி 356 ரன்கள் குவித்தது.
அதன்பின் பந்துவீச்சில் காயத்திலிருந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். ஹர்திக் மற்றும் சர்துல் இருவரும் விக்கெட் பெற்றார்கள். இவர்களுக்கு அடுத்து பந்துவீச்சில் ஐந்தாவதாக களத்திற்கு வந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், எட்டு ஓவர்கள் பந்து வீசி, 25 ரன்களை மட்டுமே கொடுத்து, ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி, பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக செயல்பட முடியாமல் முடக்கி விட்டார்.
இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறித்தும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் குறித்தும் அதிகப்படியான பேச்சுகள் இருந்தது. நேற்று எல்லாவற்றுக்கும் இந்தியா அணி முடிவு கட்டியிருக்கிறது. இந்திய அணிக்கு இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.