விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை கடந்தவர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சமன்செய்துள்ளார்.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் 5 போட்டிகள் நடந்து முடிந்து பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் 6ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்களாக பாபர் அசாம், முகமது ஹரிஸ் ஆகியோர் களமிறங்கினார்கள். ரிஸ்வான் இல்லாததால் முழு பொறுப்பும் பாபர் அசாம் மீது இருந்தது. அதற்கேற்றாவரு பாபரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்தார்.
Trending
இருப்பினும் மற்ற பேட்டர்கள் ஹரிஸ் 7, மசூத் 0, ஹைதர் அலி 18, இஃப்திகார் அகமது 31 ஆகியோர் நிலைத்து நின்று விளையாடாமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆசிப் அலி 9, நவாஸ் 12 ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், பாபர் அசாம் 59 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 87 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 169/6 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர் பிலிப் சால்ட் துவக்கம் முதலே காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் அலேக்ஸ் ஹேல்ஸ் 27, டேவிட் மலான் 26 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
சால்ட் இறுதிவரை களத்தில் இருந்து 41 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் டக்கட்டும் 26 களத்தில் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 170/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைபெற்று 3-3 என தொடரை சமன் செய்துள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
விராட் கோலியும் பாபரும் இந்த சாதனையை தங்களின் 81ஆவது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்தில் (101 இன்னிங்ஸ்) ரோஹித் சர்மா (108 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now