
பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. பின்னர் தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் ஆகா 54 ரன்களும் அடித்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அணியில் லிட்டன் தாஸ் சதமடித்தும், மெஹிதி ஹசன் அரைசதம் கடந்தும் அசத்த அந்த அணி 262 ரன்களைச் சேர்த்தது.
இதில் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 138 ரன்களையும், மெஹிதி ஹசன் மிராஸ் 78 ரன்களையும் சேர்த்தனர்.பாகிஸ்தான் அணியில் குர்ராம் ஷஷாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்கதேசத்தின் ஹசன் மெஹ்மூத், நஹித் ராணா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், ஆகா சல்மான் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் சேர்த்தனர்.