1-mdl.jpg)
நேற்று பாகிஸ்தானிலுள்ள முல்தானில் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாள் அணிகள் மோதின. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 131 பந்தில் 151 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை தேடித் தந்தார்.
மேலும் இந்தச் சதத்தின் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 19ஆவது சதத்தை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற உலகச் சாதனையை படைத்தார். மேலும் ஐந்தாவது விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பாகிஸ்தான் ஜோடி என்ற சாதனையை இப்திகார் அகமது உடன் சேர்ந்து நிகழ்த்தினார். இதற்கு முன்பு 5000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்திருந்தார். பாபர் அசாமின் பேட்டிங் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சீராகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த காரணத்தால் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது தற்காலத்தில் மிக அதிகமான ஒன்றாக இருக்கிறது. சில நேரங்களில் இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் புள்ளிவிபரங்களைக் கொண்டு மோதிக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பாபர் அசாம் விராட் கோலி உடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு, விராட் கோலி தன்னைக் குறித்துக் கூறிய மிக முக்கியமான வார்த்தைகள் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.