மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - பாபர் ஆசாம்!
முதல் 10 ஓவர்களில் பந்து வீச்சிலும் மிடில் ஓவர்களில் பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என பகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 367/9 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளும் ஹரிஷ் ரவூஃப் 3 விக்கெட்களும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 368 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 134 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்களில் ஸ்டோய்னிஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசாம் 18 ரன்னில் அவுடாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் முகமது ரிஸ்வான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் சவுத் ஷாக்கில் 30, இப்திகார் அகமது 26 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரிஸ்வானும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 45.3 ஓவரில் பாகிஸ்தானை 305 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Trending
ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளால் 5ஆவது இடத்திற்கு சரிந்தது. இந்நிலையில் வெறும் 10 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவறவிட்டதால் வார்னர் 163 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பாபர் ஆசாம், “பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. வார்னர் போன்றவரின் கேட்ச்சை தவறவிட்டால் அவர் உங்களை விடவே மாட்டார். பெரிய ரன்கள் அடிக்கக்கூடிய பெங்களூரு மைதானத்தில் தவறுகள் சிறிதாக இருக்க வேண்டும். கடைசி சில ஓவர்களில் எங்களுடைய பவுலர்கள் நல்ல லைன், லென்த்தை பின்பற்றி ஸ்டம்ப் லைனில் வீசியதற்கு பாராட்ட வேண்டும். கடந்த காலங்களில் வெற்றி கண்டதை இம்முறையும் நம்மால் சாதிக்க முடியும் என்பதே எங்களுடைய பவுலர்களுக்கு செய்தியாகும். ஆனால் பேட்டிங்கில் மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. மொத்தத்தில் முதல் 10 ஓவர்களில் பந்து வீச்சிலும் மிடில் ஓவர்களில் பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now