PAK vs ENG, 3rd Test: ஜேக் லீச் அபாரம்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. மறுபக்கம் மூத்த வீரர் அசார் அலியை வெற்றியுடன் வழியனுப்பவும், ஆறுதல் வெற்றியை பெறவும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
Trending
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதில் பாபர் ஆசாம் அதிகபட்சமாக 78 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்கின் அபார சதத்தின் மூலம் முன்னிலையைப் பெற்றது. இதில் ப்ரூக் 111 ரன்களையும், பென் ஃபோக்ஸ் 64 ரன்களையும் குவிக்க, பின்வரிசையில் மார்க் உட் (35) மற்றும் ராபின்சன் (29) ஆகிய இருவரும் சிறு பங்களிப்பு செய்தனர். இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 354 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத், நௌமன் அலி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 50 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அப்துல்லா ஷஃபிக் 14 ரன்களுடனும், ஷான் மசூத் 3 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஷான் மசூத் 24 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 26 ரன்களிலும், அசார் அலி ரன் ஏதுமின்றியும் ஜேக் லீச்சின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் பாபர் ஆசாம் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்து, இரண்டாவது இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதில் பாபர் ஆசாம் 13 ரன்களுடனும், சௌத் சகீல் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now