
உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாக இன்று நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டி அமைந்திருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 401 ரன்கள் குவித்து அசத்தியது. ரச்சின் ரவீந்தரா இந்த தொடரில் மூன்றாவது முறையாக சதம் அடித்தார். இந்தப் போட்டிக்கு திரும்ப வந்த கேன் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மழை ஒருபுறம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது. இந்த சூழ்நிலையில் டக்வோர்த் லீவிஸ் விதியை மனதில் வைத்து, இலக்குக்கு அதிரடியாகவும் விளையாட வேண்டும், அதே சமயத்தில் விக்கெட்டையும் தரக்கூடாது என்கின்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடியது. இந்த ரன் துரத்தலில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஸமான் அவருடைய வழக்கமான இயல்பான பேட்டிங் பாணியில் பின்னி எடுத்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் சதம் அடித்தார்.
இறுதியாக பாகிஸ்தான் 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் வந்து நிற்காமல் பெய்தது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.