
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்த உதவியுடன் 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதையும் எட்ட விடாத அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்களையும் எடுத்து இங்கிலாந்தை 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி பெற உதவினர். அதனால் 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு பவுலர்கள் தான் முக்கியமான காரணமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் பும்ரா, ஷமி உள்ளிட்ட அனைத்து இந்திய பவுலர்களும் துல்லியமான லென்த் பந்துகளை வீசி இங்கிலாந்தை வீழ்த்தியதாக முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற நங்கூரத்தை போட முயன்ற ஜோஸ் பட்லரை இத்தொடரின் சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் போல்டாக்கியதாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.