வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னிலும், ரஹ்மத் ஷா ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களிலும், முகமது நபி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த போதிலும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 45.2 ஓவர்களில் ஆஃப்கான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.