
வங்கதேசம் சென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மிர்பூரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின் இணைந்த மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ரன் மழை பொழிந்தனர்.
இதில் ஹசன் ஜாய் அரைசதம் கடந்தார். நஜ்முல் ஹொசைன் சதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 212 ரன் சேர்த்த போது ஹசன் ஜாய் 76 அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மோமினுல் ஹக்கும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அபாரமாக விளையாடிய நஜ்முல் ஹொசைன் 146 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 362 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷ்பிக்கூர் ரஹிம் 41 ரன்களுடனும், மெஹிதி ஹசன் 43 ரன்களுடனும் தொடர்ந்தனர்.