
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி தொடரையும் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
வங்கதேசத்தின் சாட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவானும், இஷான் கிஷனும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். சீனியர் வீரரான ஷிகர் தவான் வெறும் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியதால் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்த இஷான் கிஷன், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்த இஷான் கிஷன் 85 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.