
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும், கேப்டன் ஷான்டோ 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். மோமினுல் ஹேக் 5 ரன்னில் வந்து வேகத்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முஷ்ஃபிகுர் ரஹிம் நிதானமாக விளையாடினார். 3 ஃபோர்ஸ், 1 சிக்ஸர் விளாசி 83 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், இன்னிங்ஸின் 41ஆவது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார். அப்போது 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்ஃபிக்கூர் ரஹிம் லேசாக ஸ்ட்ரோக் வைத்தார்.