
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த கமிந்து மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 36 ரன்களிக் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 37 ரன்கள் எடுத்திருந்த கமிந்து மெண்டிஸும் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.