
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்களையும், திமுத் கருணரத்னே 86 ரன்களையும் சேர்த்து அசத்தினர். வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 54 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், அந்த அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது.