
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தனஞ்செயா டி சில்வா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனஞ்செயா டி சில்வா 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 12 ரன்களிலும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கும், சரித் அசலங்கா 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்ததுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் மெண்டிஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 86 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.