BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஜிம்பாப்வே அணியும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் கிரேக் எர்வின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்லார்ட் கும்பியும் 17 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, அவரைத்தொடர்ந்து பிரையன் பென்னட்டும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் கேப்டன் சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ் மற்றும் ரியான் பார்ல் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதனால் ஜிம்பாப்வே அணி 38 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய கிளைவ் மடாண்டே - வெல்லிங்டன் மஸ்கட்ஸா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழைப்பை தடுத்தனர். பின்னர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுன் 8ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய கிளைவ் மடாண்டே 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்திருந்த வெலிங்டன் மஸகட்ஸாவும் 34 ரன்களில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரான்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தஸ்கின் அஹ்மத் மற்றும் சைஃபுதின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 125 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் தன்ஸிதுடன் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோயும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 1- 0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now