
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவ்ர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 21 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்கதேச அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - ஜகார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தாவ்ஹித் ஹிரிடோய் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஜகார் அலியும் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.