
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே வங்கதேச அணி முதல் போட்டியை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேசமயம் யுஏஇ அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறு என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வங்கதேச அணியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி இத்தொடரில் மேலும் ஒரு டி20 போட்டியானது சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது டி20 போட்டி மே 21 அன்று ஷார்ஜாவில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.