
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டுவரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பயிற்சி ஆட்டத்தின் போது மஹ்முதுல் ஹசன் தனது இடுப்பு பகுதியில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் அவரது காயம் சரியாக சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக எந்தவொரு மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.