
வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸத்ரான் 7 ரன்னிலும், குர்பாஸ் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த செதிகுல்லா அடலும் 28 ரன்னில் ஆட்டமிழக்க, டரகைல் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிரங்கிய தார்விஷ் ரசூலி நிதானமாக விளையாடி 32 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்னிலும், முகமது நபி ஒரு ரன்னிலும், கேப்டன் ரஷித் கான் 12 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்த முஜீப் உர் ரஹ்மான் 23 ரன்களைச் சேர்க்க, ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சைஃபுதின் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷாகிப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த தன்ஸித் ஹசன் - சைப் ஹொசைன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.