
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட வங்கதேசம் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று டர்பனில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 367 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக தெம்பா பவுமா 93 ரன்களும் கேப்டன் டீன் எல்கர் 67 ரன்களும் எடுத்து கை கொடுத்தனர். வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் அசத்திய கலீத் அஹமத் 4 விக்கெட்டுகளையும் மெஹந்தி ஹசன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசத்தை தனது அபார பந்துவீச்சால் தென்னாபிரிக்க பவுலர்கள் ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தினார்கள்.