இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணியின் அனுபவ வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். வங்கதேச அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் மஹ்முதுல்லா 138 டி20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்களுடன் 2,394 ரன்களைக் குவித்துள்ளார்.